சாலைபாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளிக்கூட வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளிக்கூட வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி முதல் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதன் 4-வது நாளான நேற்று பள்ளிக்கூட வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதற்காக கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் இருந்து 70 வாகனங்கள் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு நேற்று காலையில் கொண்டு வரப்பட்டு இருந்தன.
அதன் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றியும், அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை அளிப்பது பற்றியும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து டிரைவர்கள் முன்னிலையில் வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரி முக்கண்ணன் ஆய்வு செய்தார். வாகனங்களில் தகுதிச்சான்று, அனுமதிச்சான்று, இன்சூரன்சு, மாசுகட்டுப்பாட்டு சான்று உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளனவா? தீத்தடுப்பான், அவசரகால கதவுகள் செயல்படுகிறதா? முதல் உதவி பெட்டியில் காலாவதியாகாத மருந்துகள் உள்ளனவா? என்பதை அவர் ஆய்வு செய்தார்.
இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சொந்தமான 160 வாகனங்களில் 70 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. மற்ற வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
இன்றைக்கு ஆய்வு செய்யப்பட்ட வாகனங்களில் சிலவற்றில் தீத்தடுப்பான்கள் செயல்படவில்லை, முதல் உதவி பெட்டிகளில் காலாவதியான மருந்துகள் இருந்தன, அவற்றை சரி செய்யும் படி அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், ராஜேஷ்கண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story