வேலூரில், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் ஆந்திர மாநில அரசு பஸ் ஜப்தி


வேலூரில், விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு  இழப்பீடு வழங்காததால்  ஆந்திர மாநில அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 9 Feb 2019 4:15 AM IST (Updated: 8 Feb 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று ஆந்திர மாநில அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வேலூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் 2016–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18–ந் தேதி வேலூர்– சித்தூர் ரோட்டில் உள்ள கழனிப்பாக்கம் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பஸ் சேகர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சேகர் குடும்பத்துக்கு ரூ.37 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை.

அதைத்தொடர்ந்து சேகர் குடும்பத்தினர் மீண்டும் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி வட்டியுடன் சேர்த்து ரூ.45 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அப்போதும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்கவில்லை.

இதுகுறித்தும் சேகர் குடும்பத்தினர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி வெற்றிச்செல்வி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த ஆந்திர மாநிலஅரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.


Next Story