நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் இயக்குவது குறித்து பயிற்சி இன்று தொடங்குகிறது
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரத்தை இயக்குவது என்பது குறித்து பொதுமக்களுக்கு இன்று முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரத்தை இயக்குவது என்பது குறித்து பொதுமக்களுக்கு இன்று முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒப்புகை சீட்டு எந்திரம்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து மின்னவாக்கு பதிவு எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தியதும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் வி.வி.பாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு பதிவிடும் எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திரத்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று நேற்று முன்தினம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்.
பயிற்சி
இந்த பயிற்சியானது இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒவ்வொரு வாரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 7 எந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரத்தை, துணைதாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினரிடம் கொடுத்து அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று பயிற்சி அளிக்க உள்ளனர்.
இந்தநிலையில் நெல்லை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 7 ஒப்புகை சீட்டு எந்திரமும் நேற்று நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள ஊழியர்களுக்கு அதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று எடுத்துக்கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை தாசில்தார் ஆவுடைநாயகம், மானூர் தாசில்தார் மோகனா, தேர்தல் துணைத்தாசில்தார்கள் நாராயணன்(நெல்லை), ஆவுடையப்பன்(மானூர்), வருவாய் ஆய்வாளர்கள் அருணாசலம்(நெல்லை), உமா(தாழையூத்து), ராஜலட்சுமி(மானூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story