கோவில்பட்டியில் கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தை அடையாளம் தெரிந்தது
கோவில்பட்டியில் கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தையின் பெற்றோர் குறித்து அடையாளம் தெரிந்தது.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் கோவிலில் விட்டு சென்ற ஆண் குழந்தையின் பெற்றோர் குறித்து அடையாளம் தெரிந்தது.
கோவிலில் விட்டு செல்லப்பட்ட ஆண் குழந்தைதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் சண்டிகேசுவரர் சன்னதி முன்பு நேற்று முன்தினம் மாலையில் 1½ வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையை அதன் தாயார் விட்டு சென்றார். அங்கு தனியாக அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை கோவில் ஊழியர்கள் மீட்டு, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த குழந்தையை வாங்கி சென்று, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கோவிலில் ஆண் குழந்தையை அதன் தாயார் விட்டு சென்றது குறித்து பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியானதை பார்த்து, அந்த குழந்தையின் தந்தை நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
கூலி தொழிலாளிவிசாரணையில் அவர், விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகிபுரத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் கூலி தொழிலாளி மகேந்திரன் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருடைய மனைவி சசிகலா (28). இவர்களுக்கு பர்வீன்ராஜ் (6), கவின்குமார் (1½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவின்குமார் சளி தொல்லையால் அவதிப்பட்டதால், அவனை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கவின்குமாருக்கு மீண்டும் சளி தொல்லை ஏற்பட்டதால், அவனை தாயார் சசிகலா மீண்டும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் சசிகலா தன்னுடைய குழந்தை கவின்குமாரை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் விட்டு சென்றுள்ளார்.
தாயார் தலைமறைவுகவின்குமாருக்கு வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சசிகலா தன்னுடைய மகன் கவின்குமாரை கோவிலில் விட்டு சென்று விட்டு, தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தலைமறைவான சசிகலாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவில் இருந்த குழந்தை கவின்குமாரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷியஸ் சேவியர்ராஜ், சைல்டு லைன் உறுப்பினர் ராணி ஆகியோரிடம் குழந்தைகள் நல டாக்டர் ராமலட்சுமி ஒப்படைத்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து குழந்தை கவின்குமாரை பெற்று செல்லுமாறு மகேந்திரனுக்கு அறிவுறுத்தப்பட்டது.