ஆவடியில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


ஆவடியில் வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு ‘சீல்’ நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 9:28 PM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

ஆவடி,

ஆவடி புதிய ராணுவ சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மொத்தம் 22 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் ஆவடி நகராட்சிக்கு மாத வாடகையாக அதிகபட்சமாக ஒரு கடைக்கு ரூ.1,636 செலுத்தவேண்டும்.

2014-ல் இருந்து சுமார் 17 கடைக்காரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. வாடகை செலுத்தக்கோரி ஆவடி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் வாடகையை செலுத்தாமல் கடைக்காரர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர்.

இதையடுத்து ஆவடி நகராட்சி கமிஷனர் ஜோதிகுமார் உத்தரவின்பேரில் நகராட்சி வருவாய் அலுவலர் இந்திராணி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் 17 கடைக்காரர்கள் சுமார் ரூ.8 லட்சத்து 2 ஆயிரம் வரை ஆவடி நகராட்சிக்கு வாடகை பாக்கி வைத்திருந்தது உறுதியானது. 17 கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். அதைதொடர்ந்து நேற்று காலை 8 பேர் மட்டும் தங்கள் வாடகை பாக்கியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். எனவே அந்த கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ மட்டும் பிரிக்கப்பட்டது.

இதேபோல் ஆவடி காமராஜர் நகர் வணிக வளாகத்தில் உள்ள 15 கடைகளில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கும் நேற்று அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திருமுல்லைவாயல் அடுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 442 வீடுகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் 2012-ல் இருந்து ஆவடி நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தாததால் சுமார் ரூ.75 லட்சம் வரை பாக்கி இருந்தது.

குடிநீர் கட்டண பாக்கியை செலுத்தும்படி நகராட்சி சார்பில் வீட்டு உரிமையாளர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதையேற்று 54 பேர் மட்டும் தங்கள் வீடுகளுக்கான குடிநீர் கட்டணத்தை செலுத்தினர். இதனால் கட்டணம் செலுத்தாத 388 குடிநீர் இணைப்புகளை நேற்று முன்தினம் இரவு நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

Next Story