இளம் வாக்காளர்கள் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தல்
இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு அச்சிடும் கருவி ஆகியவற்றின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சியில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு அச்சிடும் கருவியின் செயல்பாடுகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தியா ஜனநாயக நாடாகும். உலகில் மிகச்சிறந்த மக்களாட்சியை பின்பற்றும் நாடு இந்தியா. வாக்காளர்கள் தங்களது மக்கள் பிரதிநிதிகளை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்து தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.
இதன்படி, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் 2019 யை முன்னிட்டு 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க செய்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துதல், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தல், வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விளக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளம் வாக்காளர்கள் வாக்களிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story