ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு, நடுவட்டம் அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
ஆசிரியர்கள் பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவட்டம் அரசு பள்ளியை மாணவ-மாணவிகளின் பெற்றோர் முற்றுகையிட்டனர்.
கூடலூர்,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்றது. தொடர்ந்து கட்டாய பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்வதை கண்டித்து 14 பள்ளிகளை சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
நடுவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 36 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் கருணாகரன் என்பவரை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பணியிட மாறுதல் செய்தனர். இதனால் அவர் கடநாடு அரசு பள்ளிக்கும், அப்பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியை சேர்ந்த பெண் தலைமை ஆசிரியை நடுவட்டம் அரசு பள்ளிக்கும் நியமிக்கப்பட்டனர்.
இதை அறிந்த பெற்றோர் நடுவட்டம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியை காலை 11 மணிக்கு முற்றுகையிட்டனர். மேலும் பள்ளி வளர்ச்சிக்காக பணியாற்றி வந்த தலைமை ஆசிரியரின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் நடுவட்டத்தில் பணியாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம கல்வி குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிராம கல்வி குழு தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பெற்றோர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினர். இதைத்தொடர்ந்து கருணாகரனை மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியமர்த்த வேண்டும். மீதமுள்ள ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தவறும்பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மூதாட்டி ஜெயம்மா கூறியதாவது:-
எனது பேரன் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். நீண்ட தூரம் சென்று படித்து வந்ததால் மாலையில் வீடு திரும்பிய உடன் உடல் சோர்வடைந்து படுத்து தூங்கி விடுவான். மேலும் கல்வியிலும் கவனம் செலுத்துவது இல்லை. தேயிலை தோட்ட வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பள்ளியில் மாதந்தோறும் கல்வி கட்டணம் செலுத்தி வந்தேன்.
இதனால் தனியார் பள்ளியில் படித்த எனது பேரனை நடுவட்டம் அரசு பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் வற்புறுத்தினர். இதனால் பேரனை அரசு பள்ளியில் சேர்த்தேன். இப்போது நன்கு படித்து வருகிறான். இந்த நிலையில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்தால் எனது பேரனை போல் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே அதிகாரிகள் பணியிட மாறுதல் உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நான் படித்தது கிடையாது. எனது குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு மேலாக பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை எனில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வீடு தேடி வந்து விசாரணை நடத்துவார். இதனால் குழந்தைகளும் நன்கு படித்து வந்தனர். தற்போது ஆண்டுதேர்வு வர உள்ளது.
இதனை அதிகாரிகள் கருத்தில் கொள்வது இல்லை. தேர்வு சமயத்தில் ஆசிரியர்களை இடமாறுதல் செய்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story