பள்ளி மாணவ-மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவ-மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சி அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் 251 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்ற புத்தாக்க அறிவியல் கண்காட்சியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இந்திய அரசின் நிதியுதவியுடன் மாணவ-மாணவிகளிடையே உள்ள ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ‘இன்ஸ்பையர் அவார்ட்ஸ்’ என்ற புத்தாக்க அறிவியல் விருதை சான்றிதழுடன் வழங்கி வருகிறது. இதன்படி 2018- 2019-ம் ஆண்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் 431 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இவ்வாறு பெறப்பட்ட ரொக்கப்பரிசு தொகையை கொண்டு விருது பெற்ற மாணவ-மாணவிகள் உருவாக்கிய அறிவியல் மாதிரி பொருட்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை கொண்ட அறிவியல் கண்காட்சி தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் அறிவியல் படைப்புகளின் மையக்கருத்து, செயல்படும் விதம் குறித்து மாணவ-மாணவிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த கண்காட்சியில் 251 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்தனர்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், மண் அரிப்பை தடுத்தல், காடு வளத்தை பாதுகாத்தல், போக்குவரத்து சீரமைப்பு, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவு முறை உள்ளிட்டவற்றை விளக்கும் அரங்குகள் பார்வையாளர்கள், மாணவ-மாணவிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தன. இதைத்தொடர்ந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 180 மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

இந்த கண்காட்சியில் முதல் 3 இடங்களை பெறும் 6 மாணவ-மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழும், மேலும் 6 மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வார்கள்.

இந்த கண்காட்சியில் தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, உஷாராணி, குழந்தைவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராம்பிரசாத், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய அலுவலர் பிரஜேஷ் கிருஷ்ணா உள்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story