பாலின விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கருத்தரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு


பாலின விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கருத்தரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் பேச்சு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 8 Feb 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் பாலின விகிதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கருத்தரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல்லில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்கேன் சென்டர்களை தொடர்ந்து கண்காணித்தது மற்றும் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு எடுத்துரைத்ததன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 823-ஆக இருந்த பெண் குழந்தை பாலின விகிதம், தற்போது 937-ஆக அதிகரித்து உள்ளது. இது மட்டும் போதாது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்ற நிலையினை எட்ட வேண்டும். பாலின விகிதத்தினை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகளின் பாலின விகிதம் குறைவதற்கான மிக முக்கிய காரணம், சமுதாயத்தில் பொதுமக்களிடையே காணப்படும் ஆண் குழந்தை தேவை என்ற மனப்பான்மையே ஆகும்.

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அவர்கள் அறிவதற்கான முக்கிய வாய்ப்பு மருத்துவர்கள் தான். எனவே இங்கு வந்துள்ள மருத்துவர்களாகிய நீங்கள் எத்தகைய நிலையிலும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ தெரிவிக்க கூடாது.

தமிழ்நாடு அரசும் இதற்காக பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களும் பாலினம் பற்றி தெரிவிக்கமாட்டோம் என்ற மன உறுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் போது உணவளித்தலில் ஆண், பெண் வேறுபாடு காட்டக்கூடாது. எனவே, மருத்துவர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பெண்குழந்தைகளை பாதுகாத்து பாலின விகிதம் அதிகரிக்க பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் ரமேஷ்குமார், துணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) வளர்மதி, அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள் ஜெயந்தி, சாந்தி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெயந்தி உள்பட டாக்டர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story