விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 3 வீடுகளுக்கு ‘சீல்’-அதிகாரிகள் முற்றுகை


விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 3 வீடுகளுக்கு ‘சீல்’-அதிகாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Feb 2019 3:45 AM IST (Updated: 8 Feb 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 3 வீடுகளுக்கு சீல் வைக்கப் பட்டது. அப்போது அதிகாரிகளை சிலர் முற்றுகையிட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலைப்பகுதியாகவும், அதிக வனப்பகுதிகளை கொண்டதாகவும் உள்ளது. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பேரிடர்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி மற்றும் வணிக கட்டிடங்களாக மாற்றக்கூடாது, குடியிருப்பு பகுதிகளில் தங்கும் விடுதிகள், வணிக கட்டிடங்கள், ஓட்டல்கள் கட்டக்கூடாது, 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது.

மலைப்பிரதேசமான ஊட்டியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவின் படி, ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் தங்கும் விடுதிகள், மலைச்சரிவில் கட்டப்பட்ட கட்டிடம், விவசாய நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் உள்பட 12 கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து நேற்று நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன், கட்டிட ஆய்வாளர் மீனாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வீட்டுக்கு சீல் வைக்க சென்றனர். அப்போது வீட்டில் வசித்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, வீட்டை விட்டு காலி செய்யக்கூடாது என்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்து வெளியே எடுத்து வைக்கப்பட்டு கதவை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ஊட்டி பட்பயர் பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 2 வீடுகள் என 3 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு நோட்டீசு ஒட்டப்பட்டன. இதுகுறித்து ஊட்டி நகர மக்கள் கூறியதாவது:-

நகராட்சி நிர்வாகம் சில ஓட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்து விட்டு, தற்போது வீடுகளுக்கு சீல் வைக்கின்றனர். அடுத்த மாதத்தில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், வீட்டில் வசிக்கும் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கும் நிலை உருவாகிறது. எனவே, தேர்வு முடியும் வரை வீடுகளை காலி செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஊராட்சிகளில் வீடுகளுக்கு என்று அனுமதி வாங்கி வர்த்தகம் நடத்தும் பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல், சாதாரண மக்கள் பாதிக்கும் வகையில் செயல்படுவதை அரசு மாற்று முடிவுகளை அறிவித்து உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story