தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ்சை அடித்து நொறுக்கிய 5 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ்சை அடித்து நொறுக்கியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கலுகோபசந்திரத்தை சேர்ந்தவர் சீனிவாசா (வயது 52). இவர் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை வழியாக அஞ்செட்டிக்கு இயக்கப்படும் தனியார் பஸ் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கலுகோபசந்திரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் விபத்தில் மரணம் அடைந்தார்.
இதையொட்டி அவரது நண்பர்கள், உறவினர்கள் சிலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆங்காங்கே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்கள். அவர்கள் சீனிவாசா ஓட்டி சென்ற தனியார் பஸ்சின் முன்புற கண்ணாடியிலும் போஸ்டரை ஒட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு சீனிவாசா எதிர்ப்பு தெரிவித்து போஸ்டரை கிழித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தனியார் பஸ்சின் முன்புற மற்றும் பின்புற கண்ணாடிகள், பயணிகளின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் டிரைவர் சீனிவாசாவிற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிதிரெட்டியை சேர்ந்த சோமசேகர் (29), அனுமய்யா (35), சீனிவாசன் (34), வெங்கடேஷ் (22), நாகேஷ் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் சீனன் என்கிற சீனிவாசன் (26), மாதேஷ் (25), கார்த்திக் (26) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே தனியார் பஸ்சை அடித்து நொறுக்கிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் போலீசார் கலுகோபசந்திரம், பிதிரெட்டி பகுதியில் முகாமிட்டிருந்தனர். இதனால் இறந்து போன சிவக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது நண்பர்கள் யாரும் வரவில்லை. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story