மாவட்டத்தில் 3¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம்
கரூர் மாவட்டத்தில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 3¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பாக நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான், நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.
மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 923 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளானது, அங்கன்வாடிகள், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள், தனியார் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ - மாணவிகளின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும். இதனால், மாணவ - மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்க ஏதுவாகும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த சமுதாயத்தில் இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ளுவதால் சுற்றுப்புறத்தில் குடற்புழுவின் எண்ணிக்கை குறைகிறது. 5 வயதிற்கு உட்பட்டவர்களில் 50 சதவீத குழந்தைகள் உடல் வளர்ச்சி குன்றியும், 45 சதவீத குழந்தைகள் எடை குறைவாகவும் உள்ளனர். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் அனைத்தும் இந்த மாத்திரை உட்கொள்வதன் மூலம் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த மாத்திரை பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு 10-ந் தேதிகளில் வழங்கப்படுகிறது. பள்ளியின் விடுமுறை நாளை பொறுத்து தேதிகள் மாறும் என்று சுகாதாரத்துறையினர் தெரி வித்தனர்.
Related Tags :
Next Story