5 நாட்களுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியை கடந்த பெருமாள் சிலை


5 நாட்களுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியை கடந்த பெருமாள் சிலை
x
தினத்தந்தி 8 Feb 2019 11:00 PM GMT (Updated: 8 Feb 2019 6:57 PM GMT)

5 நாட்களுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியை கடந்து பெருமாள் சிலை சென்றது.

கிருஷ்ணகிரி, 

கர்நாடகா மாநிலம் தெற்கு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இருந்து சுமார் 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது.

இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியில் புறப்பட்டது. இந்த லாரி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சிங்காரப்பேட்டைக்கு வந்தது. பின்னர் போச்சம்பள்ளி, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் இந்த லாரி பெருமாள் சிலையுடன் செல்ல முடியாது என்பதால், நதியிலேயே தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. அதன் வழியாக சிலை ஏற்றப்பட்ட 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட லாரி சென்றது. ஆனாலும் லாரியின் டயர்கள் மண்ணில் புதைந்ததால் தொடர்ந்து பெருமாள் சிலை செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து 4 என்ஜின்கள் பொருத்தப்பட்டு லாரி இயக்கப்பட்டது. ஆனாலும் லாரி தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 5 நாட்களாக பெருமாள் சிலையுடன் லாரி அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் 3 பெரிய என்ஜின்கள், 5 பெரிய டிப்பர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, அவை சிலை கொண்டு செல்லப்படும் லாரியுடன் இணைக்கப்பட்டு புறப்பட்டது. இதையடுத்து 5 நாட்களுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியை கடந்து பெருமாள் சிலையுடன் லாரி தேசிய நெடுஞ்சாலையை அடைந்தது.

அந்த நேரம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் பெருமாளை வழிபட்டனர். பின்னர் அந்த லாரி மேலுமலை வரை சென்றது. அங்கு லாரி நிறுத்தப்பட்டது. அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) புறப்பட உள்ளது. இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் சாமல்பள்ளம், சின்னாறு ஆகிய இடங்களில் உள்ள பாலங்கள் வழியாக பெருமாள் சிலையை கொண்டு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 350 டன் எடை கொண்ட சிலை மற்றும் லாரியின் எடையுடன் பாலத்தை கடந்தால் பாலம் இடிந்து விழும் வாய்ப்புள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் அருகில் தற்காலிக பாலங்கள் அமைத்து சிலையை கொண்டு செல்ல நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவ்வாறு அருகில் தற்காலிக பாலங்கள் அமைத்து சிலையை கொண்டு செல்லும் பட்சத்தில் ஓசூரை சென்றடைய குறைந்த பட்சம் 5 நாட்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story