தொப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு: ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை


தொப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு: ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Feb 2019 3:15 AM IST (Updated: 9 Feb 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண் இறந்தது தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி, 

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த மாதம் 29-ந்தேதி சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த இந்துஜா என்பவர் உடல்நலன் பாதிப்பிற்கு சிகிச்சை பெற தொப்பூர் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்துஜா சிகிச்சை பெற வந்தபோது அங்கு டாக்டர்கள் பணியில் இல்லை என்றும் அதனால் உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை அளிக்கமுடியாததால் அவர் உயிரிழந்ததாகவும் அவருடைய உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது அரசு டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா? நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்கிறார்களா? என்பதை மருத்துவத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முறையாக கண்காணித்து இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இந்த புகார் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதுதொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் கூறுகையில், இந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

Next Story