கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு


கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி லதா(வயது 27). இவர் கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் உள்ள ஒரு அடகு கடையில் தனக்கு சொந்தமான அரை பவுன் நகையை அடகு வைத்திருந்தார்.

இந்த நிலையில் அடகு வைத்த நகையை மீட்க முடிவு செய்த லதா நேற்று காலை கள்ளக்குறிச்சிக்கு சென்றார். பின்னர் அவர் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, அடகு கடைக்கு சென்று நகையை ரூ.4 ஆயிரத்துக்கு மீட் டார். அதன்பிறகு மீட்கப்பட்ட அரை பவுன் நகை மற்றும் ரூ.16 ஆயிரத்தை தனது மணிபர்சில் வைத்து, அதனை ஒரு கட்டை பையில் வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது எஸ்.ஒகையூர் செல்லும் பஸ் வந்து நின்றது. இதையடுத்து லதா அங்கிருந்த கூட்ட நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்து கட்டை பையில் மணிபர்ஸ் இருக்கிறதா? என பார்த்தபோது, அதனை காணவில்லை. மணிபர்சை மர்மநபர் யாரோ? கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லதா கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருவதோடு, பஸ் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மணிபர்சை திருடிய மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story