கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி: மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி உள்பட 3 பேர் கைது


கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி: மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2019 3:45 AM IST (Updated: 9 Feb 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்த மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேச்சேரி,

கொளத்தூர் அய்யம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி சத்தியவதி (வயது 29). இவர் கொளத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இவர் மேச்சேரியை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள விருதாசம்பட்டி குன்றிவளவு பகுதியை சேர்ந்த சசிக்குமார் மனைவி பாக்கியலட்சுமி (27), கண்ணையன் மனைவி விஜயா (53), கருப்புரெட்டியூரை சேர்ந்த புவனேஸ்வரி (45) ஆகிய 3 பேரை ஏஜெண்டாக நியமித்து, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறு தொழில் வணிக கடனாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பெற்று தருவதாக கூறி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் பணம் வசூலித்துள்ளார்.

சுமார் 378 பேரிடம் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை, சுமார் ரூ.61 லட்சம் வசூல் செய்துள்ளார். இதற்கு மேலும் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். தொடர்ந்து பணம் கொடுத்தவர்களுக்கு தொழில் தொடங்க கடனும் பெற்று வழங்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளைத்தாளை கட்டுக்கட்டாக கட்டி அதன் மீது 500 ரூபாய் நோட்டை வைத்து, அதனை ஒரு அட்டை பெட்டிக்குள் வைத்து பணம் கொடுத்தவர்களுக்கு கொடுத்தனர். மேலும் அதனை வங்கி மேலாளர் முன்பு தான் திறக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஆனால் வங்கி மேலாளர் என்று யாரும் வராததால் பணம் கொடுத்தவர்கள் அட்டை பெட்டியை திறந்து பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியவதியை நைசாக பேசி நங்கவள்ளி அருகே உள்ள விருதாசம்பட்டி குன்றிவளவுக்கு வரவழைத்தனர். தொடர்ந்து அவரை பிடித்து ஒரு வீட்டில் வைத்து விசாரித்தனர். பின்னர் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சத்தியவதியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.

ரூ.61 லட்சம் மோசடி தொடர்பாக நங்கவள்ளி போலீசார் மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி சத்தியவதி, அவரது கணவர் பூபதி மற்றும் உடந்தையாக இருந்ததாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த துணி வியாபாரி சுரேஷ் (34), கொளத்தூரை சேர்ந்த சிதம்பரம் (33), மோகன் (28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி சத்தியவதி மற்றும் சுரேஷ், சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பூபதி, மோகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள். கைதானவர்களில் சுரேஷ், பணத்தை மோசடி செய்வதற்காக வங்கி மேலாளர் என்று கூறி ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story