மும்பையில் அடுக்குமாடி கட்டிடங்கள் மூலம் 10 ஆயிரம் மலிவு விலை வீடுகள் மகாடா அறிவிப்பு


மும்பையில் அடுக்குமாடி கட்டிடங்கள் மூலம் 10 ஆயிரம் மலிவு விலை வீடுகள் மகாடா அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 5:00 AM IST (Updated: 9 Feb 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 10 ஆயிரம் மலிவு விலை வீடுகளை கட்டி விற்பனை செய்ய மகாடா முடிவு செய்து உள்ளது.

மும்பை,

மராட்டிய வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமான மகாடா பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் முதல் உயர் வருமானம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அடுக்குமாடி கட்டிடங்களில் வீடுகளை கட்டி குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்வு செய்து விற்பனை செய்து வருகிறது.

இந்த வீடுகள் தனியார் கட்டிடங்களை விட மலிவான விலைக்கு கிடைப்பதால் மகாடா வீடுகளுக்கு மவுசு அதிகம். கடந்த சில ஆண்டுகளாகவே மும்பையில் மகாடா 1,500-க்கும் குறைவான வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்தது.

கடந்த ஆண்டு 1,395 வீடுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டன. இந்த வீடுகளை வாங்குவதற்கு 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 2017-ம் ஆண்டில் 819 வீடுகளுக்கும், 2016-ம் ஆண்டில் 810 வீடுகளுக்கும் தான் குலுக்கல் நடந்தது.

லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும் நிலையில் குறைவான வீடுகளை கட்டி விற்பனை செய்து வந்ததால் மகாடா மீது மும்பைவாசிகளுக்கு அதிருப்தி உண்டானது.

இந்தநிலையில், 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மலிவு விலை வீடுகளை கட்டி விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக மகாடா தெரிவித்து உள்ளது. இதற்கான அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு மகாடா மும்பையில் 20 இடங்களை தேர்வு செய்து இருக்கிறது. இந்த வீடுகளுக்கான கட்டுமான பணிகள் அனைத்தையும் 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே கோரேகாவ் பகடி வில்லேஜ் பகுதியில் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் முடியும் என மகாடா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story