சென்னையில் நவீன சைக்கிள் சவாரி இந்த மாத இறுதியில் அறிமுகம்


சென்னையில் நவீன சைக்கிள் சவாரி இந்த மாத இறுதியில் அறிமுகம்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:15 PM GMT (Updated: 8 Feb 2019 9:16 PM GMT)

உடலுக்கு வலுவும், உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் அளிக்கும் நவீன சைக்கிள் சவாரி திட்டம் சென்னையில் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படுகிறது.

சென்னை,

சைக்கிள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஒரு மகிழ்ச்சியான வாகனம். சிறுவர்களாக இருக்கும் போது பயன்படுத்திய சைக்கிளை இளைஞர்கள் ஆனதும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் பெட்ரோல், டீசல் விலை எகிறி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் மக்கள் மீண்டும் சைக்கிளை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். “உடற்பயிற்சிக்கு சைக்கிள் ஓட்டுங்கள். சைக்கிள் சவாரி உடலுக்கு வலுவும், உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் அளிக்கும்” என்று டாக்டர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.

மக்களின் மனநிலையை அறிந்த பெருநகர சென்னை மாநகராட்சி, ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்மார்ட் பைக்’ எனும் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நவீன வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 5 ஆயிரம் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்பட உள்ளது.

இந்த திட்டத்துக்காக மெரினா, பெசன்ட்நகர், அடையாறு, மயிலாப்பூர், அண்ணாநகர், சென்டிரல், கிண்டி, செனாய்நகர் உள்பட 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிறுத்தங்களும், அதற்கான கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையிலும் அமைய உள்ளது.

இந்த திட்டத்துக்காக முதற்கட்டமாக 250 நவீன சைக்கிள்கள் தயார்நிலையில் உள்ளன. அண்ணாநகர், செனாய்நகர், மெரினா ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக மொத்தம் 25 இடங்களில் சைக்கிள் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்த திட்டம் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நவீன வாடகை சைக்கிள் சேவையை பயன்படுத்த விரும்புவோர் தங்களின் செல்போனில், ‘ஸ்மார்ட் பைக்’ என்ற செயலியை டவுன்லோடு செய்து, அதில் வங்கி விவரங்களை இணைத்திட வேண்டும். சைக்கிள் தேவைப்படும் போது அந்தச்செயலியில் பதிவு செய்து அருகில் உள்ள நிறுத்தத்தில் இருந்து சைக்கிளை எடுத்துச் செல்லலாம்.

இதற்காக யாருடைய உதவியையும் நாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த செயலி மூலம் மட்டுமே சைக்கிளின் பூட்டை திறக்க முடியும். எந்த நிறுத்தத்திலும் சைக்கிளை விட்டு செல்லலாம். சைக்கிளை நிறுத்தத்தில் விட்டு பூட்டியதும் எவ்வளவு மணி நேரம் சைக்கிளை ஓட்டி உள்ளர்கள், அதற்கான வாடகை எவ்வளவு, எங்கிருந்து புறப்பட்டீர்கள், எங்கு வரை சென்றீர்கள், இந்த பயணத்தின் மூலம் உடலில் எவ்வளவு கலோரி குறைந்துள்ளது, எந்த அளவு மாசு குறைந்துள்ளது என்பது போன்ற அனைத்து விவரங்களும் செல்போனில் தெரிந்து விடும்.

குறிப்பிட்ட இடத்துக்கு சென்று திரும்பும் வரை சைக்கிளின் பெடல் எத்தனை முறை சுற்றுகிறது என்பதை அடிப்படையாக கொண்டு உடலில் எவ்வளவு கலோரி குறைந்துள்ளது என்றும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எவ்வளவு மாசு ஏற்படும் என்பதை அடிப்படையாக வைத்து எந்த அளவு மாசு குறைந்துள்ளது என்றும் கணக்கிடப்பட்டு தெரிவிக்கப்படுகிறது.

வாடகை கட்டணம் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியுடன் செயலி மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். அதிகபட்சம் 50 ரூபாய் வரை மட்டுமே கடனாக வைத்திருக்க அனுமதிக்கப்படும். இந்த தொகைக்கு மேல் வாடகை கட்டணம் வரும் பட்சத்தில் செயலி மூலம் அறிவிப்பு வரும். அதன்பின்பும், வாடகையை செலுத்தவில்லை என்றால் செயலி செயல்பாடு நிறுத்தப்பட்டு விடும். சம்பந்தப்பட்ட நபர் அடுத்த முறை சைக்கிளை பயன்படுத்த முடியாது. ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் சைக்கிளை எங்கு ஓட்டிச் சென்றாலும் சுலபமாக கண்காணிக்க முடியும்.

சைக்கிள் வாடகையாக ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 9 ரூபாய் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

3 மாதம், ஒரு மாதம், ஒரு நாள் என 3 பயண அட்டை திட்டங்கள் உள்ளன. இந்த பயண அட்டைகளுக்கு ரூ.699, ரூ.249, ரூ.49 என சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாதம் மற்றும் ஒரு மாதம் பயண அட்டை திட்டத்தை பொறுத்தமட்டில் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள நிறுத்தத்துக்கு சைக்கிளை கொண்டு சென்று பூட்டி விட்டு மீண்டும் செயலி மூலம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு நாள் பயண அட்டையை பொறுத்தமட்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அருகில் உள்ள நிறுத்தத்துக்கு சைக்கிளை கொண்டு சென்று பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் 5 ஆயிரம் சைக்கிள்களை இயக்கும் திட்டம் 6 மாதத்துக்குள் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story