தொழிலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடும் பணி தீவிரம்


தொழிலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:00 PM GMT (Updated: 8 Feb 2019 9:27 PM GMT)

தொழிலாளி கொலை வழக்கில் கொலையாளிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் மாலை வெட்டுக்காயங்களுடன் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதை பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்தபோது அவர் நந்திவரம் கிராமத்தில் உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. வெட்டிக்கொலை செய்யப்பட்ட கண்ணன் மீது கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை வெட்டிக்கொலை செய்த கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நந்திவரம் மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ஆளில்லா குட்டி விமானத்தை சென்னையில் இருந்து கொண்டு வந்து நந்திவரம் மலைப்பகுதியில் தேடிப்பார்த்தனர். அப்போது மலைப்பகுதியில் சந்தேகப்படும்படி பதுங்கி இருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் கொலை நடக்கும் சில மணி நேரத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்ட கண்ணனுடன் சுற்றித்திரிந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது:-
கொலையாளிகளை நெருங்கி விட்டோம் மிக விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம்.

தொடர்ந்து நந்திவரம் மலைப்பகுதியில் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடும் பணி தொடரும், கொலையாளிகளை ஆளில்லா குட்டி விமானம் மூலம் தேடும்போது மலைப்பகுதியில் பள்ளி மாணவர்கள் ஜோடியாக அதிக அளவில் சுற்றித்திரிவது அதிர்ச்சியாக இருந்தது. இதனையடுத்து கண்ணில் பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story