கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது
கோவை அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.
துடியலூர்,-
கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்தப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எனது அம்மாவுக்கு 2 கணவர்கள். அதனால் நான் எனது தாய்-தந்தை, தங்கை மற்றும் வளர்ப்பு தந்தையுடன் ஒன்றாக வசித்து வருகிறேன். வீட்டில் தனியாக இருக்கும் போது என்னை கட்டாயப்படுத்தி வளர்ப்பு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை எச்சரித்தேன். மேலும் இது பற்றி நான் எனது தாயாரிடம் கூறினேன். அவரும் எனது வளர்ப்பு தந்தையை கண்டித்தார்.
ஆனாலும் அவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இந்த நிலையில் நான், குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண் 1098-க்கு போன் செய்து புகார் அளித்தேன். இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் வந்து எனது தாயாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் எனது பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சென்றனர்.
எனவே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எனது வளர்ப்பு தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story