தஞ்சையில் வாரச்சந்தை நடக்காமல் தடுக்க மண், கற்களை கொட்டிய கும்பல்
தஞ்சையில் வாரச்சந்தை நடக்காமல் தடுக்க மண், கற்களை கொட்டி சென்ற கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள நிர்மலாநகரில் 26 ஆயிரத்து 400 சதுரஅடி நிலம் உள்ளது. இந்த நிலம் யாருக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதில் நிர்மலாநகர் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கும், ஒரு அமைப்புக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது. இதனால் மாவட்ட முனிசீப் கோர்ட்டில் குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நலச்சங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து மாவட்ட கோர்ட்டு முதல் சுப்ரீம்கோர்ட்டு வரை மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவைகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால் 26 ஆயிரத்து 400 சதுரஅடி நிலத்தை சுற்றிலும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் முள்வேலி அமைக்கப்பட்டது. இதை சிலர், இரவோடு, இரவாக அகற்றினர். இந்தநிலையில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், நிலத்தை தூய்மை செய்து விடுமுறை தினங்களில் சிறுவர்கள் விளையாடுவதற்கு வழிவகை செய்தனர்.
மேலும் வாரம்தோறும் அம்மா வாரச்சந்தை நடத்தி கொள்ளவும் அனுமதி அளித்தனர். அதன்படி கடந்தவாரம் வாரச்சந்தை நடைபெற்றது. மறுநாள் வாரச்சந்தையில் கடை அமைப்பதற்காக ஊன்றப்பட்ட கம்புகளை எல்லாம் மர்மநபர்கள் சிலர், பிடுங்கி சென்று விட்டனர்.
மண், கற்கள் கொட்டப்பட்டது
மைதானம் போல் இருந்தால் தானே வாரச்சந்தையோ, விளையாட்டு மைதானமாகவோ பயன்படுத்த முடியும் என கருதிய சிலர், நேற்றுமுன்தினம் இரவோடு, இரவாக டிராக்டர்களில் மண், கற்களை அள்ளி வந்து மைதானத்தில் கொட்டி விட்டு சென்றுவிட்டனர். மேலும் நிர்மலா நகருக்கு செல்லக்கூடிய 2 பாதைகளில் ஒரு பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மண், கற்கள் கொட்டப்பட்டு இருந்தது.
இதை நேற்றுகாலை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மண், கற்களை அப்புறப்படுத்தி கொண்டு மீண்டும் பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
அதன்பேரில் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்களே தங்களது சொந்த செலவில் பொக்லின் எந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து, மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த மண், கற்களை அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story