கலப்பட பெட்ரோல் விற்றதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகன ஓட்டிகள் தர்ணா


கலப்பட பெட்ரோல் விற்றதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகன ஓட்டிகள் தர்ணா
x
தினத்தந்தி 9 Feb 2019 4:45 AM IST (Updated: 9 Feb 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

கலப்பட பெட்ரோல் விற்றதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகன ஓட்டிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் நாதம்பாளையம் ரோட்டில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் அளவு பெருமளவு குறைவாக இருப்பதாகவும், கலப்பட பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பொன்விழா காலனியை சேர்ந்த பூபதி என்பவர் நேற்று இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து தனது மொபட்டிற்கு பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்ற உடனேயே மொபட்டில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே நின்றது. மீண்டும் மொபட்டை இயக்க முயன்றார். ஆனால் பெட்ரோல் போதுமான அளவு இருந்தும், மொபட்டை இயக்கமுடியாமல் அவர் திணறினார்.

இதில் சந்தேகம் அடைந்த பூபதி மொபட்டை தள்ளிக்கொண்டு சம்பந்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. அப்போது அங்கு இருசக்கர வாகனத்துடன் வந்த மேலும் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளும் பாதி வழியில் நின்று விட்டதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்திலேயே அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் என்பவரும் தனது மொபட்டிற்கு பெட்ரோல் போட்ட சிறிது நேரத்திலேயே பழுதாகி வழியில் நின்றதாக கூறி, பழுதான மொபட்டை சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கு வந்தார். இவ்வாறு பலர் தொடர்ந்து அங்கு வந்ததும், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏராளமானோர் கூடினார்கள்.

மேலும், இதுகுறித்து உரிய பதில் அளிக்கும்படி வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடமும், அதன் நிர்வாகத்தினரிடமும் வாக்குவாதம் செய்தனர். ஆனால், தாங்கள் விற்பனை செய்யும் பெட்ரோலில் எந்த கலப்படமும் இல்லை என்று வாகன ஓட்டிகளிடம் உறுதிபட கூறியதுடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பொதுமக்களில் சிலர், பெட்ரோலை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அங்கு இருந்து பெட்ரோலை ஒரு பக்கெட்டில் ஊழியர்கள் ஊற்றி வைத்தனர். ஆனால் அது ஆவியாகாமல் நீண்ட நேரம் அப்படியே இருந்தது. இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் ஏராளமானோர் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலப்படத்துடன் விற்பனை செய்யும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை உடனடியாக சீல் வைக்க வேண்டும் என்று கூறி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில், பழுதடைந்த வாகன ஓட்டிகளை சரி செய்து கொடுப்பதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் கலப்பட பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story