ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஆர்டர்களை பெற ஆடை தயாரிப்பாளர்கள் ஆர்வம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஆர்டர்களை பெற ஆடை தயாரிப்பாளர்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:30 AM IST (Updated: 9 Feb 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஆர்டர்களை பெற உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இவ்வாறாக பின்னலாடை வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் பண்டிகை மற்றும் சீசன் கால அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்கேற்றபடி தொழில்துறையினர் தங்களுக்கு கிடைக்கிற ஆர்டர்களின் பேரில் ஆடைகளை தயார் செய்வார்கள். தற்போது குளிர்கால சீசன் முடிவடைந்து, கோடை கால ஆடை தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தொழிலாளர்கள் விடுமுறைக்கு சென்றிருந்ததால் சிறிது ஆடை தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது அனைத்து தொழிலாளர்களும் திரும்பிய நிலையில், ஆடை தயாரிப்பு பணி உற்சாகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தொழில்துறையினரும் ஆர்டர்களை முடித்து கொடுத்து விட்டு அடுத்தடுத்த ஆர்டர்களை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுதவிர அவ்வப்போது குறுகிய கால சீசன்களுக்கு ஏற்ற வகையிலும் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஆடைகளை தயார் செய்து வருகிறார்கள். கிரிக்கெட் போட்டி, கால்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகளின் போது இது தொடர்பான ஆடைகளை தயார் செய்வார்கள். இதுபோல் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 மாதமே உள்ள நிலையில் இது தொடர்பான ஆர்டர்களை பெற உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் சிலர் தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர் தினேஷ் கூறியதாவது:–

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு உள்பட அணிகள் விளையாடி வருகின்றன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணி வீரர்கள் அணிந்துள்ள டி–சர்ட்டுகள் போன்று தயாரிக்கப்படும் டி–சர்ட்டுகளை வாங்கி அணிந்து கொண்டு, தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள்.

இதனால் பல்வேறு பகுதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது ஆடை விற்பனை அதிகமாக நடைபெறும். 2 மாதம் இருக்கும் இந்த குறுகிய கால சீசனில் முடிந்த அளவிற்கு ஆர்டர்களை பெற்று, உடனே தயாரித்து அனுப்பி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 2 மாதமே உள்ளது. இதனால் தற்போது ஆர்டர்களை பெற ஆர்வம் காட்டி வந்து கொண்டிருக்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி–சர்ட் விற்பனை கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டி–சர்ட் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story