மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த அமைப்புசார தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம் ஆணையர் தகவல்
மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த அமைப்புச்சார தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர் ஆகலாம் என புதுச்சேரி அரசு தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசு கடந்த 1–ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்காக ஓய்வூதிய திட்டம் ‘பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மாத வருமானம் ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு கீழ் வருமானம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர முடியும். இதன் திட்டம் மூலமாக அவர்களுக்கு 60 வயது முதல் ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் உறுப்பினர்களாக சேரும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி வாயிலாக ரூ.55 முதல் ரூ.200 வரை தங்களின் வசதிக்கேற்ப மாதந்தோறும் பணம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பங்களிப்பாக 50 சதவீதம் தொகை மாதந்தோறும் தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் எல்.ஐ.சி. வாயிலாக செலுத்தப்படும். இந்த திட்டம் வருகிற 15–ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த திட்டத்தில் புதுச்சேரி அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர் 60 வயதுக்கு பிறகு இறக்கும் பட்சத்தில் அவருடைய குடும்ப வாரிசுக்கு 50 சதவீதம் ஓய்வூதியம் பெறலாம். இதில் பணம் செலுத்தி வரும் அமைப்புச்சாரா தொழிலாளர் 60 வயதிற்கு முன்பாக இறக்கும்பட்சத்தில் அவரின் வாரிசு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி பயன் பெறலாம்.
இதில் உறுப்பினராக சேருவதற்கு எல்.ஐ.சி.யின் கிளை அலுவலகம், எல்.ஐ.சி.யின் முகவர், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள், தொழிலாளர் காப்பீட்டு கழகங்கள், தொழிலாளர் நலத்துறை, விவசாயத்துறை, கூட்டுறவு துறை, உள்ளாட்சித்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்து அறநிலையத்துறை, மீனவர் நலத்துறை ஆகிய துறைகள், நிறுவனங்களில் உள்ள உதவி மையங்களை அணுகலாம். ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு மற்றும் ஒப்புதல் படிவம் வங்கிகளில் சமர்பித்து இதில் உறுப்பினர் ஆகலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.