அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் ஆணையர் அறிவிப்பு
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்திடம் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி அறிவித்து உள்ளார்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 11 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் கடைகளுக்கான உரிமம் புதுப்பித்தல் மற்றும் தொழில்வரி ஆகியவற்றை நடப்பு ஆண்டு (2018–19) வரைக்கும் சேர்த்து உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வீட்டுவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வருபவர்கள் நடப்பு ஆண்டுக்கான கேட்பு அறிவிப்பை எதிர்பார்க்காமல் தங்களிடம் உள்ள பழைய வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டண ரசீதுகளை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் சிலர் கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்துள்ளது, ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உடனடியாக கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அந்த குடிநீர் இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு முறைப்படுத்த தவறினால் அந்த குடிநீர் இணைப்பு எந்தவிதமான முன் அறிவிப்புமின்றி துண்டிக்கப்படும் எனவும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் மற்றும் தொழில் நடத்தி வருபவர்களில் சிலர் கொம்யூன் பஞ்சாயத்து அனுமதி பெறாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இது சட்டப்படி குற்றமாகும். எனவே உரிமம் பெறாமல் கடை நடத்தி வருபவர்களும், தொழில் செய்து வருபவர்களும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகி முறையான உரிமம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறினால் 1973–ம் ஆண்டு கிராம மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.