பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது - வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி


பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது - வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Feb 2019 5:28 AM IST (Updated: 9 Feb 2019 5:45 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் வியாபாரிகள்- பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பார்வதிபுரம், 

நாகர்கோவில் நகரில் அன்றாட பிரச்சினையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பார்வதிபுரத்தில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் தற்போது வாகன பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இருப்பதால் பார்வதிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

ஆனாலும் பாலத்தின் கீழ்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்ததால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. இதனால் பாலத்தின் கீழ்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

எனவே பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பணிகள் முடுக்கி விடப்பட்டது. இரவு, பகலாக அங்கு வேலைகள் நடந்தது.

இந்த நிலையில் பார்வதிபுரம் மேம்பாலத்துக்கு கீழ் சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் பாலத்தின் கீழ்பகுதியில் வாகன போக்குவரத்து தொடங்கியது. அரசு பஸ்களும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக செல்ல தொடங்கின. பார்வதிபுரம் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்லாமல் இருந்ததாலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும் அங்குள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் அங்குள்ள வியாபாரிகள், அந்த பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story