நித்திரவிளை அருகே சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை
நித்திரவிளை அருகே சிறுமிக்கு சூடு வைத்து தந்தை சித்ரவதை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்,
நித்திரவிளை அருகே வாவறை சூரியகோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவருக்கு 8 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர். மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். மணிகண்டனின் மனைவி இறந்துவிட்டதால், அவர் 2-வதாக ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணிகண்டன் தன் மகளான சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அக்கம் பக்கத்தினருக்கு மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று மணிகண்டனின் வீட்டுக்கு சென்று சிறுமியை அழைத்து சோதனை நடத்தினர். அப்போது சிறுமியின் உடலில் சூடு வைத்த காயங்கள் இருந்தன. இதனையடுத்து சிறுமியையும், அவளுடைய சகோதரனான 4 வயது சிறுவனையும் அதிகாரிகள் மீட்டனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணையும் நடத்தினர்.
இதற்கிடையே மணிகண்டனின் கொடூர செயல்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சிறுவனை அவனுடைய தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story