மங்கலம்பேட்டை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
மங்கலம்பேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் திடீரென பழுதடைந்தது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் கிராம மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய கிணற்றுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இது பற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு, விருத்தாசலம்- சிறுவம்பார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களை சமாதானப்படுத்தி விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story