உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 10 Feb 2019 11:15 AM IST (Updated: 9 Feb 2019 4:46 PM IST)
t-max-icont-min-icon

அன்று என்ன நடந்தது? ஏன் அப்படி ஒரு ஆக்ரோஷம் வந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாக பதில்சொல்ல அவளுக்கு தெரியவில்லை.

ன்று என்ன நடந்தது? ஏன் அப்படி ஒரு ஆக்ரோஷம் வந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கமாக பதில்சொல்ல அவளுக்கு தெரியவில்லை. ஆனால் பத்து வருடங்களுக்கு மேலாக கணவனிடம் அனுபவித்த சித்ரவதை அவளுக்குள் அனலாய் கொதித்து அசுர வேகத்தில் அப்படி ஒரு முடிவை எடுக்கத்தூண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவள் கையில் இருந்த சுத்தியலால், கணவனின் உச்சிமண்டையில் அடித்தே கொன்றுவிட்டாள். தண்டனைபெற்று, சில ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அவள், தான் கொலைகாரியாக மாறிய கதையை சொல்கிறாள்!

“மலையடிவாரத்தில் இருக்கும் சிறிய நகரம் ஒன்றில் நான் பிறந்து வளர்ந்தேன். அவன் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அதே பள்ளியில் நான் 9-ம் வகுப்பு படித்தேன். அவன் எனது அண்ணனின் நண்பன். அதனால் எங்கள் வீட்டிற்கு வருவான். என்னையும் பார்த்து பேசுவான். அதனால் பள்ளிப்பருவத்திலேயே எங்களுக்குள் இனம்புரியாத காதல் வந்துவிட்டது. நான் பள்ளி இறுதி ஆண்டோடு படிப்பை நிறுத்திவிட்டேன். அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான். எங்கள் காதல் தொடர்ந்துகொண்டிருந்தது.

நாங்கள் வசித்த பகுதியில் அவனது குடும்பம் செல்வாக்கானது. மலைகளில் இருந்து மரங்களை கொண்டுவந்து, வெளி இடங்களுக்கு விற்பனை செய்வது அவனது தந்தையின் தொழில். திடீரென்று அவனது தந்தை இறந்து போனார். அதனால் அவன் படிப்பை நிறுத்திவிட்டு, தந்தையின் தொழிலை கவனித்தான். அந்த நேரத்தில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்ல யாரும் இல்லாததால், நாங்கள் திருமணத்தில் இணைந்தோம். அப்போது என் வயது 20.

நாங்கள் பல வருடங்களாக காதலித்திருந்தாலும் தனிமையில் ஒருபோதும் சந்தித்ததில்லை. அப்போது எல்லை மீறும் எண்ணம் அவனுக்கும் இருந்ததில்லை. அவனுக்கு ‘பாலியல் உறவு கொள்ளும் நேரத்தில் சேடிஸ்ட் எண்ணம் தலைதூக்கும்’ என்பது, வெகுகாலம் அவனோடு பழகிய என் அண்ணனுக்கும் தெரியாது.

திருமணமான அன்றே நான் நொறுங்கிப்போனேன். என்னை நிர்வாணமாக்கி கை, கால்களை கட்டிப்போட்டுக்கொண்டு அந்த வலியில் நான் அவஸ்தைப்படும்போது அவன் மகிழ்ச்சியாக உறவுகொள்வான். சில நாட்கள் தாங்கிக்கொண்டேன். பின்பு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘கணவன்- மனைவி இடையேயான தாம்பத்ய உறவில் அதுவும் ஒருவகை. உனக்கு முன்அனுபவம் இல்லாததால்தான் அதை தப்பு என்கிறாய்..’ என்றான். நானும் அதை சகித்துக்கொண்டேன்.

பின்பு கர்ப்பமானேன். அதன் பின்பும் முன்புபோல் முரட்டுத்தனமான சேடிஸ்ட்டாகவே நடந்து கொண்டதால் கருக்கலைந்துவிட்டது. இரண்டு முறை அடுத்தடுத்து கருக்கலைந்ததால், மூன்றாவது முறை கர்ப்பமானதும் என் தாயின் வீட்டிற்கு சென்றுவிட்டேன். குழந்தை நல்லபடியாக பிறந்தது. பிரசவமாகி ஆறு மாதங்கள் கழித்தே கணவனின் வீடு திரும்பினேன்.

அந்த இடைப்பட்ட காலத்தில் என் கணவனின் பாலியல் செயல்பாடுகளால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுமி ஒருத்தி பாதிக்கப்பட்டிருந்தாள். திருமணமான பெண் ஒருத்தி இவரால் தற்கொலை செய்திருக்கிறாள். ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கிறாள்.. இப்படி பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைக்கேட்டு நான் துடித்துப்போனேன். எனது கணவனின் குடும்பம் வசதி படைத்தது என்பதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பணத்தை வாரிக்கொடுத்து பிரச்சினைகளில் இருந்து தப்பியிருக்கிறான்.

என் கணவன் தப்பிப்பதற்கு காரணமாக இருந்த இளைஞர்கள் மது மற்றும் பவுடர் வகையை சேர்ந்த போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள். என் கணவனுக்கும் அந்த பழக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை நான் குழந்தையோடு வீடு திரும்பிய அன்றே உணர்ந்து கொண்டேன். அன்றிலிருந்து மீண்டும் கடுமையான பாலியல் சித்ரவதைகளை அனுபவித்தேன். இரவு மட்டுமல்ல, காலையிலும் நினைத்த நேரத்தில் வந்து நின்று, உடனே படுக்கைக்கு அழைப்பான். குழந்தை அருகில் இருந்தாலும், உற்றார்- உறவினர்கள் யார் அருகில் இருந்தாலும் பொருட்படுத்தமாட்டான். ஏற்கனவே மனதளவில் காயமாகியிருந்த நான், உடலளவிலும் காயமானேன். உடல் ஆங்காங்கே கன்றிப்போயிருந்தது. நான் ஒரு தசைப்பிண்டம்போல் பாவிக்கப்பட்டேன். அந்த கொடுமைக்கு முடிவுகட்ட முடியாமல் தவித்தேன்.

கொலை நடந்த அன்று, காலை 11 மணி இருக்கும். வீட்டு சுவரில் சாமி படம் ஒன்றை மாட்டுவதற்காக நாற்காலி போட்டு அதன் மீது ஏறி நின்று சுத்தியலால் ஆணிஅடித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் கணவன் வந்தான். சலனம்கேட்டு திரும்பினேன். அவன் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் பயன்படு்த்தியிருப்பது தெரிந்தது. வந்ததும் என்னை அப்படியே இடுப்பைப் பிடித்து குண்டுகட்டாகத் தூக்கினான். அந்த பிடியில் இருந்த வெறித்தனத்தில் என் எலும்புகளே நொறுங்குவதுபோல் இருந்தது. ஏற்கனவே உருவாகியிருந்த ரணங்கள் தாங்கமுடியாத வலியை தந்தது. எங்கிருந்து அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ, தெரிய வில்லை. கையில் இருந்த சுத்தியலால், அவனது உச்சி மண்டையில் ஓங்கி அடித்தேன். முதல் அடியிலே நிலை குலைந்து சரிந்தான். நான் அவன் மீது விழுந்தேன். நான் சுதாரித்து எழுந்து, மீண்டும் சுத்தியலால் அவன் மண்டையில் அடித்தேன்..”

அவரை குற்றுயிராக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே இறந்துபோனார். இவள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சிறை தண்டனை அனுபவித்து வருகிறாள்.

நாம் சொல்ல விரும்புவது, ‘வெளியே தெரியாத அளவுக்கு இப்படிப்பட்ட விசித்திரமான பாலியல் மனநோயாளிகளும் இருக்கிறார்கள் என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்பதைத்தான்!

- உஷாரு வரும்.

Next Story