திருவேங்கடம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பிளஸ்–2 மாணவர் சாவு அண்ணன் படுகாயம்


திருவேங்கடம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பிளஸ்–2 மாணவர் சாவு அண்ணன் படுகாயம்
x
தினத்தந்தி 10 Feb 2019 3:30 AM IST (Updated: 9 Feb 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக பலியானார். அவருடைய அண்ணன் படுகாயமடைந்தார்.

திருவேங்கடம், 

திருவேங்கடம் அருகே ஆட்டோ கவிழ்ந்து பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக பலியானார். அவருடைய அண்ணன் படுகாயமடைந்தார்.

பிளஸ்–2 மாணவர்

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் சின்ன காளிராஜ். இவருடைய மகன்கள் மஞ்சள் மாரியப்பன் (வயது 25), மகேஸ்வரன் (17). மஞ்சள் மாரியப்பன் கலிங்கப்பட்டியில் உள்ள மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும் பகுதி நேர வேலையாக தனது நண்பரின் ஆட்டோவையும் வாடகைக்கு ஓட்டி வருகிறார். மகேஸ்வரன் முரம்பில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். சம்பவத்தன்று மஞ்சள் மாரியப்பன் ஆட்டோவில் சவாரி ஏற்றிக்கொண்டு திருவேங்கடத்திற்கு சென்றார். அப்போது அவர் மகேஸ்வரனையும் அழைத்து சென்றார்.

பரிதாப சாவு

திருவேங்கடத்திற்கு சென்றுவிட்டு 2 பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். குலசேகரன்கோட்டை காலனி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது.

இதில் ஆட்டோவில் இருந்த மகேஸ்வரன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மஞ்சள் மாரியப்பன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சள் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மகேஸ்வரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story