நண்பனை கொன்ற லாரி டிரைவருக்கு 7 ஆண்டு ஜெயில் கொலையை மறைக்க உதவிய மனைவிக்கு 3 ஆண்டு சிறை
நண்பனை கொன்ற லாரி டிரைவருக்கு 7 ஆண்டும், கொலையை மறைக்க உதவிய மனைவிக்கு 3 ஆண்டும் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
வேலூர்,
பரதராமி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 41). இவருடைய மனைவி நிர்மலா (32). சசிகுமாரின் நண்பர் ஆம்பூர் தாலுகா வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த வேலன் (38). இருவரும் லாரி டிரைவர்கள். வேலன், சசிகுமாரின் வீட்டில் தங்கி லாரி ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வேலனுக்கும், நிர்மலாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சசிகுமாருக்கு தெரியவரவே, அவர் ஆத்திரம் கொண்டார். வேலனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி 31.10.2017 அன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலனின் தலையில் கல்லைபோட்டு சசிகுமார் கொலை செய்தார்.
இதையடுத்து நிர்மலா கணவனின் கொலையை மறைக்க முடிவு செய்தார். அதை தொடர்ந்து இருவரும் வேலனின் உடலை தூக்கிக் கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது தகவல் அறிந்து மருத்துவமனைக்குவந்த வேலனின் குடும்பத்தினரிடம், வேலன் விபத்தில் இறந்து விட்டதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர். எனினும், வேலனின் சாவில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பரதராமி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் சசிகுமார், வேலனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வக்கீல் அ.கோ.அண்ணாமலை ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.குணசேகர், வேலனை கொலை செய்த சசிகுமாருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் கொலையை மறைத்ததற்காக அவரது மனைவி நிர்மலாவுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.