அடுக்கம்பாறை அருகே மாடுவிடும் விழாக்களில் பரிசுகளை குவித்த காளை இறந்தது தாரை, தப்பட்டை முழங்க உடலை எடுத்துச்சென்று கிராம மக்கள் அடக்கம்
மாடுவிடும் விழாவில் பங்கேற்று பரிசுகளை வென்று தந்த காளை இறந்ததையடுத்து அந்த காளையை தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.
அடுக்கம்பாறை,
விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கும் காளையை தமிழர்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். காளைகள் இறந்தால் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததைபோல உணர்ந்து அந்த காளைக்கு மரியாதை செய்வது வழக்கமாக உள்ளது.
வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த அ.கட்டுப்படி கிராமத்தில் விமல் (வயது 28) என்ற விவசாயி காளை வளர்த்து வந்தார். அந்த காளை வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த காளைவிடும் திருவிழாவில் பங்கேற்று மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பல்வேறு பரிசுகளை வென்று பெருமை சேர்த்து வந்தது. அந்த காளையை கிராம மக்கள் ‘சூப்பர் ஸ்டார்’ என பெயரிட்டு அழைத்து வந்தனர்.
அந்த காளையை களமிறக்கி விட்டாலே இளைஞர்கள் ஆரவாரம் செய்வர். தனக்கு பரிசுகளை வென்று வந்த அந்த காளையை விமல் தெய்வமாக கருதி வளர்த்து வந்தார். தினமும் சிறப்பு உணவுகளை காளைக்கு வழங்கி அதற்கு பல்வேறு பயிற்சிகளை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் ‘சூப்பர்ஸ்டார்’ காளை நேற்று இறந்து விட்டது. தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததைபோல நினைத்து காளையின் உடலை பார்த்து விமலின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
கிராமத்தை சேர்ந்தவர்களும் காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இறந்தவர்களின் உடலுக்கு எந்தவிதமான மரியாதை செய்ய வேண்டுமோ அதே மரியாதையை செய்தபின் காளையின் உடல் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. விமலின் சொந்த நிலத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காளை பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.