பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
வாக்குப் பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து விளக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதற்கான விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்,
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலின்போது மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. பல தேர்தல்களில் மின்னணு எந்திரம் மூலம் வாக்காளர்கள் வாக்களித்தாலும் தற்போது யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை காட்டும் கருவி இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் 5 பேர் அடங்கிய தலா 7 குழுக்கள் வீதம் 91 குழுக்களில் 455 பணியாளர்கள்கள் இந்த விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மாதிரி வாக்குப்பதிவு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவற்கான 7 விழிப்புணர்வு வாகனங்களை வேலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர் மெகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி, வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.