குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதி உதவி திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் விரிவு அலுவலரிடம் 34 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்து விசாரணை
குடியாத்தத்தில் திருமண நிதியுதவி திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி விரிவாக்க அலுவலரிடம் ரூ.34 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம்,
தமிழக அரசு சமூக நலத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டத்தின்கீழ் திருமண நிதிஉதவியாக 10–ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கமும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்த திட்டத்தின்கீழ் 2016–17 ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் சில தினங்களில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதிஉதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளிடம் லஞ்சமாக பணம் பெறுவதாக வேலூர் லஞ்சஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
தொடர்ந்து இந்த பயனாளிகளிடம் நேற்று (சனிக்கிழமை) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை விரிவு அலுவலர் சாவித்திரி லஞ்ச பணம் பெறுவதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் பி.விஜயலட்சுமி, எஸ்.விஜயலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் மாறுவேடத்தில் நேற்று காலை 9 மணி அளவில் சென்று பயனாளிகளை போல சென்றனர். அவர்கள் அங்கு காத்திருந்த பயனாளிகளுடன் பயனாளிகளை போலவே அமர்ந்தனர்.
அப்போது பயனாளிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரித்துள்ளனர். விண்ணப்பம் அளிக்கும்போது தலா ரூ.2 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், தற்போது சில தினங்களில் பணம் மற்றும் தங்கம் வழங்க உள்ளதால் அதற்கு ரூ.1, 500 முதல் 2 ஆயிரம் வரை கேட்பதாகவும் அந்த பணத்தை கொடுப்பதற்காக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விரிவாக்க அலுவலர் அறைக்கு ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். மாறுவேடத்தில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 3 மணி நேரம் பயனாளிகளை போலவே அங்கிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவாக்க அலுவலர் சாவித்திரியிடம் (வயது 54) சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் கணக்கில் வராத ரூ.34 ஆயிரத்து 70 இருந்தது. அது குறித்து கேட்டபோது அவரால் முறையான பதில் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை இதேபோல் திருமண நிதிஉதவி திட்டத்தின்கீழ் லஞ்சம் பெற்றதாக விரிவு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.