சிவகிரி அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது குடம் விழுந்து 3 மாத குழந்தை பரிதாப சாவு


சிவகிரி அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது குடம் விழுந்து 3 மாத குழந்தை பரிதாப சாவு
x
தினத்தந்தி 10 Feb 2019 3:30 AM IST (Updated: 9 Feb 2019 7:35 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது குடம் விழுந்து 3 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

சிவகிரி,

சிவகிரி அருகே கோவில் கும்பாபிஷேகத்தின் போது குடம் விழுந்து 3 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.

3 மாத குழந்தை 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் தேவர் மணல் மேடு தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டியன் (வயது 38). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காயத்திரி (30). இவர்களுக்கு கிஷோர் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தேவிபட்டினம் பஸ் நிறுத்தம் மேற்புறத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காயத்திரி, கிஷோரை தூக்கி சென்றார். அங்கு அவர் கோவில் கோபுரத்திற்கு கீழே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அவருடன் ஏராளமான பக்தர்களும் நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்.

பரிதாப சாவு 

அப்போது கோபுர கலசத்தில் புனித நீர் தொளிப்பதற்காக செல்ல சாரம் கட்டப்பட்டிருந்தது. அந்த சாரத்தின் மீது ஒரு குடத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குடம் கீழே நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வகாளி மீது விழுந்து, கிஷோர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் காயமடைந்தனர். குடம் விழுந்ததில் வலி தாங்க முடியாமல் கிஷோர் அலறி துடித்தான்.

உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வகாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிஷோரை மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story