ஆரணி அருகே விண்ணமங்கலத்தில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்


ஆரணி அருகே விண்ணமங்கலத்தில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே விண்ணமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் 600 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி, 

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், விண்ணமங்கலம் ஊராட்சியில் தமிழக அரசின் 2018–19–ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ‘அசீல்’ நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது. மாரியம்மன் கோவில் திடலில் நடந்த விழாவுக்கு கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் முகமதுகாலித் தலைமை தாங்கினார். செய்யாறு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., அரசு வக்கீல் கே.சங்கர், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, உதவி இயக்குனர் டாக்டர் எம்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எஸ்.பிரபாகர் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளை சேர்ந்த 600 பயனாளிகளுக்கு விலையில்லா ‘அசீல்’ நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வழங்கி னார். அவர்களுக்கு கோழிக்கூண்டுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:–

விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் கால்நடை மேம்பாட்டுத் துறை மூலமாக விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மாடுகள் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.

தற்போது ரூ.75 ருபாய் வீதம் ஒரு பயனாளிக்கு 50 கோழிக்குஞ்சுகள் ரூ.3 ஆயிரத்து 750– மதிப்பில் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் விலையில்லா ‘அசீல்’ நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது.

ஏழை, மிகவும் ஏழை பயனாளிகள் பயன்பெறுவதற்காக இவை வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் முறையாக பராமரித்து முட்டைகளை விற்றும் இனப்பெருக்கமாகும் கோழிக்குஞ்சுகளை விற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள்தீபாகாந்தி, ஆறுமுகம், கண்ணன், திருஞானம், என்.வாசு, கால்நடை டாக்டர்கள் நிர்மலா, பிரபு, கிருஷ்ணகுமார் உள்பட அரசியல் பிரமுகர்கள், கால்நடைத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story