மனைவி வெட்டிக் கொலை: சரண் அடைந்த அரசு ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்


மனைவி வெட்டிக் கொலை: சரண் அடைந்த அரசு ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 10 Feb 2019 3:45 AM IST (Updated: 9 Feb 2019 8:12 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்து போலீசில் சரண் அடைந்த அரசு ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்து போலீசில் சரண் அடைந்த அரசு ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெட்டிக்கொலை 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரும்பூர் ரைஸ்மில் காலனியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (வயது 57). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நவமணி (49).

நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூத்துக்குடியில் இருந்து செந்தூர்பாண்டி வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது, வீட்டில் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தூர்பாண்டி, அரிவாளால் நவமணியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் செந்தூர்பாண்டி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து செந்தூர்பாண்டியை காவலில் எடுத்த ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலம் 

வாக்குமூலத்தில் செந்தூர்பாண்டி கூறி இருப்பதாவது;–

நாங்கள் தற்போது வசித்து வரும் வீடு நவமணியின் சித்தி சீவிழியின் பெயரில் உள்ளது. ஆனால் அந்த வீட்டை கட்ட நானும் உதவி செய்தேன். சீவிழி தற்போது அந்த வீட்டுக்கு பின்னால் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சீவிழிக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் பெயரில் உள்ள வீட்டை உனது பெயரில் மாற்றிவிடு என்று நவமணியிடம் கூறி வந்தேன். ஆனால் அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டுக்கு வந்த போது, எங்களுக்குள் வீடு சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நான், வீட்டில் இருந்த அரிவாளால் நவமணியை சரமாரியாக வெட்டிக் கொன்றேன்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

சிறையில் அடைப்பு 

இதனையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார், செந்தூர்பாண்டியை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். செந்தூர்பாண்டி– நவமணி தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் நாகர்கோவிலிலும், 2 மகள் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story