வால்பாறையில் தொடர் அட்டகாசம்: காட்டுயானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்


வால்பாறையில் தொடர் அட்டகாசம்: காட்டுயானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறல்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. அவைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

வால்பாறை,

வால்பாறை வட்டார பகுதி முழுவதும் தொடர்ந்து காட்டுயானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலேயே காட்டுயானைகள் நடமாடத் தொடங்கி விட்டன. இதனால் எஸ்டேட் பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும்,வால்பாறை பகுதி பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக அதிகளவில் முகாமிட்டுள்ளன. தற்போது பகல் நேரத்தில் கடுமையான வெப்பமும் இரவு நேரத்தில் பனியும், கடுமையான குளிரும் கலந்த கால சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீரோடைகள், ஆறுகளில் தண்ணீர் வற்றிப்போகத் தொடங்கிவிட்டது. இதனால் யானைகள் அதிகளவில் தண்ணீர், உணவுக்காக இடம் பெயரத் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் யானைக் கூட்டங்களில் தற்போது குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவைகள் புதிதாக பிறந்த குட்டிகளுடன் உலா வருகின்றன. இந்த குட்டிகளை அழைத்து செல்லும்போது, அவைகள் சோர்வடைவதால் எஸ்டேட் பகுதிகளில் இரண்டு, மூன்று நாட்களுக்கும் மேல் யானைகள் முகாமிட்டு நின்று விடுகின்றன.

இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நுழைந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. ஒர நாளில் மட்டும் காட்டுயானைகள் கூட்டமாக சென்று, சிறுகுன்றா எஸ்டேட் கீழ்பிரிவு பகுதியில் முனியாண்டி என்பவரின் டீக்கடையை இடித்து விட்டு கடைக்குமுன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தின. பின்னர் அதே பகுதியில் உள்ள பரமேஸ்வரன் என்பவரின் மளிகைக்கடை, சிந்தாமணி ரேசன்கடை, சிங்கோனா எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியில் உள்ள சிந்தாமணி ரேசன்கடை ஆகியவைகளை இடித்து சேதப்படுத்தின.

தற்போது சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மூன்று குட்டிகள் உள்பட 12 யானைகளும், சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் 2 குட்டிகள் உள்பட 6 யானைகளும் முகாமிட்டுள்ளன. இதில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் அதிகாலை 6மணிக்கு சேதங்களை ஏற்படுத்திவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்றன.

வால்பாறை வனச்சரக வனத்துறையினரும், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினரும் யானைகளை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.வனச்சரக வனத்துறையினருக்கு போதிய பணியாளர்கள் இல்லாததும், வாகன வசதிகள் இல்லாததாலும், காட்டுயானைகளின் அட்டகாசத்தால், சேதங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாமலும், எஸ்டேட் பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கமுடியாமலும், வனத்துறையினர் திணறிவருகின்றனர் என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை உயர் அதிகாரிகள் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையில் காலியாக உள்ள வனப்பணியிடங்களை நிரப்புவதற்கும், ரோந்துப் பணிக்கு போதிய வாகன வசதிகள் செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எஸ்டேட் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று வால்பாறை அருகே உள்ள அட்டகட்டி மின்வாரிய குடியிருப்பு வளாகத்திற்குள் மஸ்து (மதம்) பிடித்த ஒரு ஆண்காட்டு யானை புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளுக்குள் சென்று விட்டனர். இந்த யானை வனத்துறையினரை எதிர்த்து வந்தது.

இதனால் அந்த யானையை தொடர்ந்து விரட்ட முடியாமல் வனத்துறையினர் பின்வாங்கினர். இதனை தொடர்ந்து அந்த யானை தானாக வனப்பகுதிக்குள் செல்லுமா? என்று வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டனர். சுமார் 1 மணிநேரத்துக்கு பிறகு அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினரும் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து மின்வாரிய குடியிருப்பு பகுதி மக்கள் கூறியதாவது:- திடீரென ஒரு காட்டுயானை மட்டும் தனது செயல்களில் வித்தியாசப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதியையொட்டி உள்ள காட்டுப்பகுதிக்குள் இருந்து வந்தது. அதன் நெற்றிப்புறங்களில் ஒரு வித திரவம் சுரந்து கொண்டே இருந்தது. யா முரட்டுத்தனமாக துதிக்கையில் கிடைத்ததை எல்லாம் வீசியவாறு ஆவேசத்துடன் நடந்து வந்தது.

இதனால் அந்த யானைக்கு மதம் பிடித்து உள்ளது என்று அறிந்து கொண்டோம். இதற்கிடையில் அந்த யானை சின்னத்தம்பி யானையாக இருக்குமோ? என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. வனத்துறை வந்ததும்தான் அந்த யானை சின்னத்தம்பி யானை அல்ல என்பது உறுதியானது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story