ஊட்டி படகு இல்லத்தில் ரூ.23½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள், நவீன கழிப்பறைகள்


ஊட்டி படகு இல்லத்தில் ரூ.23½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள், நவீன கழிப்பறைகள்
x
தினத்தந்தி 10 Feb 2019 3:45 AM IST (Updated: 9 Feb 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி படகு இல்லத்தில் ரூ.23½ லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்குகள், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஊட்டி,

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஊட்டி ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு நபருக்கு ரூ.13 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி மற்றும் கேமராவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உணவு விடுதி, பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் கிடைக்கிறது.

மினி ரெயிலில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் ஆர்வமுடன் பயணம் செய்கின்றனர். ஏரியின் இயற்கை அழகை ரசிக்கும் பொருட்டு, இருபுறங்களிலும் காட்சி மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதையின் இருபுறத்திலும் பச்சை பசேல் என்ற புல்வெளிகள், மலர் செடிகள் சுற்றுலா பயணிகளை கவருகிறது. புல்வெளியில் அமர்ந்து அவர்கள் ஓய்வு எடுக்கின்றனர்.

கோடை சீசன், 2-வது சீசன், பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் படகு இல்லத்துக்கு வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாகன நிறுத்துமிடம், வெளிப்புறத்தில் கட்டண கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவதை முன்னிட்டு, சுற்றுலாத்துறை செயலர் அபூர்வ வர்மா உத்தரவின் படி ஊட்டி படகு இல்லத்தில் ரூ.23½ லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடந்து உள்ளது.

படகு இல்லத்தில் வாகன நிறுத்துமிடத்தில் ரூ.9½ லட்சம் மதிப்பில் 2 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. உள்பகுதியில் நடைபாதையோரத்தில் ரூ.4½ லட்சம் செலவில் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக ரூ.9½ லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் ரூ.22½ லட்சம் செலவில் 4 மோட்டார் படகு, 12 மிதி படகுகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story