கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்


கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மசினகுடி,

நீலகிரியின் முக்கிய மலைப்பாதைகளில் ஒன்றான கல்லட்டி மலைப்பாதையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து, செல்கின்றன. குறிப்பாக கர்நாடகம், கேரளம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் கல்லட்டி மலைப்பாதை வழியாக தான் ஊட்டிக்கு வருகின்றனர். சிங்காரா வனப்பகுதிக்குள் இந்த மலைப்பாதை அமைந்து உள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் வாகனங்களை நிறுத்த வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி சமையல் செய்தல், வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல் உள்ளிட்ட அத்துமீறும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கல்லட்டி மலைப்பாதையின் இருபுறமும் உள்ள வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. புற்கள், செடி, கொடிகள் காய்ந்து எளிதில் தீப்பற்ற கூடிய நிலையில் உள்ளன. இதனால் கல்லட்டி மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் புகைபிடித்துவிட்டு சிகரெட் துண்டுகளை வீசினால் அதன் மூலம் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காட்டுத்தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்க சிங்காரா வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனச்சரகர் காந்தன் மற்றும் வனவர் பீட்டர்பாபு தலைமையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மாவனல்லா முதல் கல்லட்டி சோதனைச்சாவடி வரை மலைப்பாதையின் இருபுறமும் உள்ள முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டு அவற்றை தீயிட்டு எரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறியதாவது:-

தற்போது வனப்பகுதி வறண்டு வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், அதனை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்லட்டி மலைப்பாதையில் காட்டுத்தீ ஏற்பட்டால், அதனை கட்டுபடுத்துவது கடினம். எனவே சாலை ஓரத்தில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் சிகரெட் துண்டுகளை வீசினாலும் தீ ஏற்படாது. மேலும் இந்த ஆண்டு காட்டுத்தீயை கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாரேனும் காட்டுத்தீ ஏற்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story