மேட்டுப்பாளையம் அருகே கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி யானை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி தாயுடன் சேர்த்தனர்
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த ஒரு வயது குட்டி யானையை வனத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தாய் யானையுடன் சேர்த்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி அலையும் காட்டுயானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் சுண்டப்பட்டி பிரிவு குமரிக்காடு சரக பகுதியையொட்டி உள்ள தனியார் தோட்டத்திற்குள் யானை கூட்டம் புகுந்தது. பின்னர் காலையில் வனப்பகுதிக்கு திரும்பின. அந்த கூட்டத்தில் தாயை பிரிந்த 1 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியானை அகழியை கடந்து செல்ல முடியாமல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் ஆலோசனைப்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில், சுண்டப்பட்டி பீட் வனக்காப்பாளர் தினகரன், வனக்காவலர் நாகராஜன் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய குழுவினர் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டியானையை அவர்கள் தடவி கொடுத்தும் விளையாட்டுகாட்டியும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.பிறகு மெதுவாக தள்ளிசென்றனர்.ஆனால் குட்டியானை முரண்டு பிடித்தது. தொடர்ந்து ஒருவர் முன்னால் ஓட, யானை அவருக்கு பின்னால் ஓடியது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காலை 9 மணியளவில் யானை குட்டியை வனப்பகுதிக்குள் சென்று தாய் யானையுடன் சேர்த்தனர்.
இதற்கிடையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நடுத்திட்டு பகுதியில் விவசாய தோட்டங்களுக்கு அருகில், பவானி ஆற்றங்கரையோரம் யானைகள் கூட்டமாக சுற்றி வருவதாக நேற்று காலை 9 மணி அளவில் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஜெனால்டு வில்சன், காஜா மொய்தீன் ஆகியோர் விரைந்து சென்றனர். பின்னர் விவசாயிகள் உதவியுடன் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Related Tags :
Next Story