கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு நேற்று மாலை 3.30 மணிக்கு காரில் திடீரென வந்தார். பின்னர் அவர், அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள், பதிவு செய்துள்ள வழக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணி குறித்து போலீசாரிடம் கேட்டார்.
இதனை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு, ரெயில் நிலைய பகுதிகளையும் பார்வையிட்டார்.
இது குறித்து ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இது வழக்கமான ஆய்வுதான். கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்திற்கு முதன்முறையாக ஆய்வு செய்ய வந்துள்ளேன். ரெயிலில் பயணம் செய்யும்போதோ அல்லது ரெயில் நிலையத்தில் காத்திருக்கும்போதோ தங்களது உடைமைகளை பயணிகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் மீறி பொருட்கள் திருடுபோனாலோ அல்லது தொலைந்து போனாலோ ரெயில் நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ரெயிலில் பயணம் செய்யும்போது திருட்டு நடந்ததால், அது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும் என்பது கிடையாது. தமிழகத்திற்கு வந்து, அருகில் உள்ள ரெயில் நிலையங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.
ரெயிலில் பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அதனை பயணிகள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்ணுக்கு ஏதேனும் பாலியல் தொல்லையோ அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டதால் ‘ஜி.ஆர்.பி. ஹெல்ப்’ என்ற செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம். அடுத்த சில நிமிடங்களில் அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது விழுப்புரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா உடன் இருந்தார்.
Related Tags :
Next Story