வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பரிதாப சாவு செல்லகெரே அருகே சோக சம்பவம்


வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பரிதாப சாவு செல்லகெரே அருகே சோக சம்பவம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:00 AM IST (Updated: 10 Feb 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

செல்லகெரே அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்கமகளூரு,

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா ராமஜோவிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நாகரத்னா (வயது 30). இவர்களின் மகள்கள் விஜயவாணி (5), தீர்த்தவர்தனா (4), கோமலா (2). இவர்கள் மண் வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர், நாகரத்னா, விஜயவாணி, தீர்த்தவர்தனா, கோமலா மற்றும் சந்திரசேகரின் உறவினர் மகளான தேவிகா ஆகியோர் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென்று அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.

இதில் அவர்கள் அனைவரும் கட்டிட இடிபாடுகளிடையே சிக்கி, மரண ஓலமிட்டனர். இவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்டனர். நாகரத்னா, விஜயவாணி, தீர்த்தவர்தனா, கோமலா ஆகிய 4 பேரும் இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சந்திரசேகர் மற்றும் தேவிகா ஆகியோரை உயிருடன் மீட்டனர். அவர்கள் 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை சிகிச்சைக்காக செல்லகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சாவின் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் செல்லகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செல்லகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் சித்ரதுர்கா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரோசண்ணா, செல்லகெரே தாசில்தார் மல்லிகார்ஜுன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் இடிபாடுகளிடையே சிக்கி பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மண் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அந்த வீடு மிகவும் பலவீனமாக இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய்-3 மகள்கள் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Next Story