காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் பொன்னையா, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்தார்.

மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 7 வாகனங்கள் வீதம் 77 வாகனங்களில் வருகிற 13-ந்தேதி வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசார முகாம்கள் நடத்துவார்கள்.

ஒரு வாகனத்தில் 4 அலுவலர்கள், ஒரு காவலர் பணியில் இருப்பர். தினந்தோறும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுமக்கள் கூடுமிடத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும், அரசு பொது கட்டிட வளாகங்களிலும் இந்த குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்வார்கள்.

முதல் முறையாக செயல்பாட்டுக்கு வரும் கருவியின் விளக்க நிகழ்ச்சியான இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மாதிரி வாக்குப்பதிவினை செய்து வாக்காளர் தாம் அளித்த வாக்கினை மாதிரி வாக்குப்பதிவு மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இந்த கருவியில் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை 7 நொடிகள் நேரடியாக பார்வையிடலாம்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் தாசில்தார் காஞ்சனமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story