பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு பிரசாரம்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:15 AM IST (Updated: 10 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்துவதற்காக பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 6 குழுக்களும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 6 குழுக்களும் சேர்த்து மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பிரசார வாகனங்களை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

விழிப்புணர்வு பிரசார வாகனத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவருடன் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 240 வாக்குச்சாவடி நிலையங்களுக்கு நேரடியாக செல்கின்றனர். நேற்று முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நொச்சியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாம் அளித்த வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவியை வாக்காளர்கள் பார்வையிட்டனர். வருகிற 13-ந் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவியானது வாக்காளர் தாம் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய அச்சிடப்பட்ட தாளை 7 வினாடிகளுக்கு மட்டும் பார்க்க அனுமதிக்கும். இந்த கருவி வாக்காளர்கள் தெரிவு செய்து வாக்களித்த வேட்பாளருக்கு தான் வாக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும், சரிபார்க்கவும் அனுமதிக்கிறது.

மேற்படி இந்த விழிப்புணர்வு வாகனமானது தங்கள் வாக்குச்சாவடி நிலையத்திற்கு வரும்போது வாக்காளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியில் வாக்களித்து மேற்படி எந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப்பற்றி வாக்காளர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வாக்காளர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கலெக்டர் அலுவலக வளாகத் தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சத்தியநாராயணன், சப்-கலெக்டர் (நிலம்) பாலாஜி, தாசில்தார்கள் கதிரவன் (அரியலூர்), சந்திரசேகரன் (தேர்தல் பிரிவு) மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு நாளும் 4 கிராமங்கள் வீதம் வருகிற 13-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி குறித்த செயல்முறையை அதிகாரிகள் விளக்கி காட்டி, மாதிரி வாக்குப்பதிவு செய்து அதன் வாயிலாக வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

Next Story