வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2019 4:00 AM IST (Updated: 10 Feb 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்தார்.

திருவள்ளூர்,

சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகள் இல்லாமல் பயணம் செய்யலாம். மனித உயிர் விலைமதிப்பற்றது. இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்களும், பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து காவலர்களின் சைகைகளை கண்டு அதன்படி சாலை விதிகளை மதித்து செல்வதால் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்.

ஆட்டோ டிரைவர்களும் தங்கள் வாகனத்தை இயக்கும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆட்டோக்களை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

உயிரிழப்புகளை தடுக்க வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை கடைபிடித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, கிருஷ்ணராஜ், ராஜேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையத்தில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சம்பத் முன்னிலை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு பொன்னி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகமாக நடைபெற்றுள்ளன. இதற்கு காரணம் அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணியாததும்தான். இது குறித்து பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும் உயிரிழப்புகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

18 வயது நிரம்பாதவர்கள் மோட்டார் சைக்கிள், கார் ஓட்டுவது குற்றமாகும். நிகழ்ச்சியின் முடிவில் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி சாலை விதிகளை பின்பற்றுவது பற்றிய துண்டு பிரசுரங்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார். இன்ஸ்பெக்டர்கள் அனுராதா, மதியரசன், ஜெயவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சுரேஷ், தமிழ்செல்வி, பார்த்திபன், சீனிவாசன், பிரதாபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பூபால முருகன் தலைமை தாங்கினார். ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார்.

Next Story