கிராமங்களில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடுகள் அமைச்சர்கள் வழங்கினர்


கிராமங்களில் பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடுகள் அமைச்சர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

அதவத்தூர், கே.கள்ளிக்குடி கிராமங்களில் பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் நாட்டுக்கோழி குஞ்சுகள், வெள்ளாடுகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் அதவத்தூர், கே.கள்ளிக்குடி ஆகிய கிராமங்களில் விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நாட்டுக்கோழிக்குஞ்சுகள் மற்றும் வெள்ளாடுகளை வழங்கினர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதவத்தூர், மாதுளங்கொல்லை கிராமங்களை சேர்ந்த 66 பயனாளிகளுக்கு தலா 50 கோழிக்குஞ்சுகள் ரூ.3,690 மதிப்பிலும் மற்றும் அவற்றை வளர்ப்பதற்கு கூண்டு அமைத்திட ரூ.2,500-ம், கோழிகள் வளர்ப்பதற்கு பயிற்சிக்காக ரூ.180-ம் என ஒருவருக்கு மொத்தம் ரூ.6,370 மதிப்பில் அரசு சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார். கிராமப்புறத்தில் உள்ள ஏழை-எளிய மக்கள் நாட்டுக் கோழிகள் வளர்த்து தங்களை பொருளாதாரத்தில் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

நமது மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா 200 பயனாளிகள் வீதம் 2,800 பேருக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 36 ஆயிரம் விலையில்லா நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வளர்க்க 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மிகவும் ஏழ்மையான பெண் பயனாளிகளும் தேர்வு செய்யப்படுவர். இதில் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் பேசினர். நிகழ்ச்சியில் திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நெடுஞ்செழியன், ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் சுரேஷ்கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story