ஈரோட்டில் பரபரப்பு இரும்பு பட்டறையில் குளோரின் கியாஸ் கசிவு மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு


ஈரோட்டில் பரபரப்பு இரும்பு பட்டறையில் குளோரின் கியாஸ் கசிவு மூச்சுத்திணறலால் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2019 4:45 AM IST (Updated: 10 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள இரும்பு பட்டறையில் குளோரின் கியாஸ் கசிந்ததால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

மதுரையை சேர்ந்தவர் விவேக் (வயது 30). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பழைய இரும்பு பட்டறை ஈரோடு வைராபாளையம் பகுதியில் உள்ளது.

இந்த பட்டறையில் 15–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பழைய இரும்புகளை வாங்கி அதை தரம் பிரித்து பெரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி இங்கு நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இந்த பட்டறையில் இருந்து குளோரின் கியாஸ் கசிந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் ஏராளமானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் நிலைய அதிகாரி அந்தோணி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு குடியிருந்தவர்களை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் பட்டறைக்குள் சென்று பார்வையிட்டனர். அப்போது பட்டறையில் வைக்கப்பட்டு இருந்த 300 கிலோ எடை கொண்ட பழைய உருளையில் இருந்து குளோரின் கியாஸ் கசிந்து கொண்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் சுண்ணாம்பு தூளை அந்த பெரிய உருளையின் மீது கொட்டி குளோரின் கசிவை கட்டுப்படுத்தினர். எனினும் அந்த உருளையில் இருந்து தொடர்ந்து குளோரின் கியாஸ் கசிந்து கொண்டே இருந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த தீயணைப்பு படை வீரர்கள், அந்த பெரிய உருளையை பூமிக்கு அடியில் புதைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டி அந்த உருளை புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த பட்டறையில் பல மாதங்களாக குளோரின் கியாஸ் சிலிண்டர் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் வால்வு பகுதி உடைந்து குளோரின் கியாஸ் கசிந்துள்ளது. அந்த சிலிண்டர் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்’ என்றனர்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘சிறிய அளவில் கியாஸ் கசிந்ததால் எங்களுக்கு மூச்சு திணறல் மட்டும் ஏற்பட்டு உள்ளது. சிலிண்டர் வெடித்திருந்தால் எங்களது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட இரும்பு பட்டறையை அப்புறப்படுத்துவதுடன், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

குளோரின் கியாஸ் கசிவால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.


Next Story