தாராபுரத்தில் சம்பவம்: விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை
தாராபுரத்தில் விடுதியில் 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்,
திருப்பூர் முருங்கம்பாளையம், சக்திமளிகை வீதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருடைய மகள் நவ்யா (வயது 15). இவர் தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ மகளிர் விடுதியில் தங்கி, அதே வளாகத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம் போல் நேற்று பள்ளி செயல்பட்டது. நவ்யாவும், விடுதியில் தங்கியிருந்த மாணவிகளும் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு, மதியம் சாப்பிட விடுதிக்கு வந்துள்ளனர். மாணவிகள் அனைவரும் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் விடுதியில் இருந்த கம்ப்யூட்டர் அறையில் மாணவி நவ்யா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த விடுதியின் காப்பாளர் நவ்யாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நவ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் விசாரணையில் சி.எஸ்.ஐ மாணவிகள் விடுதியில் 100–க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். நவ்யா கடந்த 4 ஆண்டுகளாக 9–ம் வகுப்பு படிக்கும் தனது தங்கையுடன் சேர்ந்து இந்த விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். நேற்று பள்ளிக்குச் சென்ற நவ்யா, பள்ளியின் மதிய இடைவேளையின் போது, சாப்பிடுவதற்காக சக மாணவிகளுடன் விடுதிக்கு வந்துள்ளார். மாணவிகள் அனைவரும் மதிய உணவு சாப்பிட்ட பிறகு பள்ளிக்கு சென்றுவிட்டனர்.
நவ்யா மட்டும் பள்ளிக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். அப்போது விடுதி காப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டனர். பிறகு விடுதியின் காப்பாளர்களில் ஒருவரான சரண்யா என்பவர் மதியம் சுமார் 3.30 மணிக்கு விடுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த கம்ப்யூட்டர் அறையின் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அங்கு சென்றார். அப்போது மேற்கூரையில் இருந்த மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு நவ்யா தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர் சரண்யா சத்தம் போட்டுள்ளார். உடனே அருகே இருந்தவர்கள் ஓடிவந்து, தூக்கில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நவ்யாவை மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு நவ்யாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நவ்யா தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம். அவருடைய தற்கொலைக்கு யார் காரணம் என்பதை தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவியின் தற்கொலை குறித்து அவரது தந்தை குபேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது மகள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவள் 10–ம் வகுப்பு படிக்கிறாள். நன்றாக படிப்பாள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு பயப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டாள். காதல் பிரச்சினைகள் ஏதும் இல்லை. குடும்பத்திலும் அவளுக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. அவ்வாறு இருக்க எங்களுடைய மகள் நவ்யா தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும். அவள் கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மாட்டாள். அவளுடைய இறப்பில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. போலீசார் முறையாக விசாரணை நடத்தி, எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.