பிரதமரின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பிரதமரின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருப்பூர்,
பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடக்கும் அரசு விழா மற்றும் பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக விழா மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை பா.ஜனதா தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றுமாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமரின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும். திருப்பூர் பகுதி மட்டுமில்லாமல் கோவை பகுதி மக்கள் பிரதமர் மோடி மீது பாசம் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் பிரதமரை பாசத்தோடு எதிர்கொண்டு வருகிறார்கள். மோடி மதுரைக்கு வந்து சென்றதே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் திருப்பூர் வருகை நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். நேர்மறையான அரசியலை தமிழகத்தில் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம்.
பிரசாரத்துக்கு மட்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. அவர் வரும்போதெல்லாம் தமிழகத்துக்கு நல்ல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்றமுறை வந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு மட்டுமில்லாமல் 48 மாதத்தில் அந்த பணிகள் முடிந்து சிகிச்சை தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை, திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தமிழ்நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதுபோல் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை தமிழகத்துக்கு அர்ப்பணிக்கிறார். ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களுக்கும், தொடங்கப்படும் திட்டங்களுக்கும் வழிவகை செய்யும் வகையில் பிரதமர் வருகை இருக்கிறது. எவ்வளவுதான் விமர்சனத்துக்கு ஆளானாலும் தமிழகத்துக்கு இத்தனை திட்டங்களை வேறு யாரும் கொடுத்ததில்லை என்ற பெயரை மோடி பெற்று வருகிறார்.
தமிழக பட்ஜெட் விவசாயிகள் மீதும், ஏழை மக்கள் மீதும், பெண் குழந்தைகள் படிப்பு மீதும் அக்கறையோடு சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். ரூ.10 ஆயிரம் கோடியை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்காகவும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடல் பரிசோதனை செய்வதாகவும் அறிவித்து இருக்கிறார்கள். மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசின் திட்டங்களுடன் இணைத்திருக்கிறார்கள். பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பயிர்க்காப்பீட்டு திட்டம் இதுபோன்ற திட்டங்களை இணைத்து செயல்படுத்தும் போது மக்களுக்கு நல்ல திட்டங்கள் சென்றடைய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் அரசு விழா நடைபெறும் மேடை அமைப்பு பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.